07/30/2010
Hot News

வெள்ளைக்கொடி விவகார வழக்கு 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை

பொன்சேகாவின் பாராளுமன்ற சிறப்புரிமையை உறுதிப்படுத்தவும் நீதிமன்றம் பணிப்பு

 வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் விசாரணைகளில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை 20 சாட்சியங்களுக்கு அழைப்பாணை விடுத்துள்ளதுடன், ஜெனரல் பொன்சேகாவின் பாராளுமன்ற சிறப்புரிமைகளை உறுதிசெய்யுமாறும் அந்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வடக்கு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகளைப் புலி முக்கியஸ்தர்கள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா கூறியதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தொடர்பாகவே ஜெனரல் பொன்சேகா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது சரத்பொன்சேகா எதிரணியின் பொது வேட்பாளராக இருந்த காலகட்டத்திலேயே இந்தச்செய்தி வெளியாகியிருந்தது.

இந்த விடயம் நீதிபதி தீபாலி விஜேசுந்தர தலைமையில் நீதிபதிகள் டபிள்யூ.எம்.பி.பி.வராவௌ மற்றும் சுல்பிகார் ரஷன் ஆகியோர் அடங்கலான மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையும் அதனுடன் அவர் தெரிவித்ததாகத் தகவல்கள் சம்பந்தமான 3 சீ.டி.க்களும் சட்டமா அதிபர் சார்பிலிருந்து நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.எனினும் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரம் சி.டி.க்களை ஆராய்ந்து பார்க்க 45 நாட்கள் கால அவகாசம் தேவையெனப் பிரதிவாதி (சரத்பொன்சேகா)தரப்பு சட்டத்தரணிகள் நீதிபதிகள் குழாமிடம் கேட்டுள்ளனர். இதன் பிரகாரம் நீதிபதிகள் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

இதேநேரம், ஜெனரல் பொன்சேகா ஏற்கனவே சில வழக்குகளின் அடிப்படையில் இராணுவத் தடுப்புக் காவலில் இருப்பதால் அவருக்குப் பிணை கோராத அவர் தரப்புச் சட்டத்தரணிகள் எனினும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சரத்பொன்சேகா அவர் உறுப்பினராக இருக்கும் அமைச்சுகள் தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டங்கள், மனுக்கள் பற்றி ஆராயும் குழுக்கூட்டங்கள், கட்சித் தலைவர்கள் கூட்டங்கள் மற்றும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவேண்டுமென்றும் பிரதிவாதித் தரப்புச் சட்டத்தரணிகள் மன்றில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சரத்பொன்சேகாவின் பாராளுமன்றச் சிறப்புரிமையைப் பாதுகாத்து உறுதிசெய்யுமாறு நீதிபதிகள் குழாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி முதல் நாளாந்தம் தொடர்ச்சியாக நடைபெறுமென அறிவித்த நீதிபதிகள் குழாம் அந்த விசாரணைகளுக்கென 20 சாட்சியங்களுக்கும் அழைப்பாணை விடுத்துள்ளது.

 
Current News
Foreign News
Sports News
 
Indian News
Editorial
Other Articles
Parliament